விளையாடும்போது வெற்றி என்பது எங்களுக்கு இலக்காக இருக்கவேண்டும். அந்த வெற்றியை உரிய தடத்தின் ஊடாகவே நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதை விட நேர்வழியில் போராடி தோல்வியடைவது சிறப்பானது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விளையாட்டு விழா ஓமந்தையிலுள்ள விளையாட்டுத் திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (03) இடம்பெற்றது.
அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் விளையாட்டுக்கு வழங்கப்படுவது குறைவு. பெற்றோர்களும் இதற்கு ஒருவகையில் காரணம்.
கல்வியால் மாத்திரம் ஒருவரின் ஆளுமைகளை மேம்படுத்த முடியாது. ஏனைய துறைகளிலும் குறிப்பாக விளையாட்டுத்துறையில் பங்கேற்பதன் மூலம் எங்களை நாங்களே ஆளுமையுள்ளவர்களாக வடிவமைத்துக் கொள்ளலாம்.
விளையாட்டுத்துறையைப் பொருத்தவரையில் வடக்கு மாகாணம் இன்னமும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியிருக்கின்றது. விளையாட்டு வீரர்களை நாங்கள் இளமையிலிருந்தே அவர்களைப் பயிற்றுவிக்கவேண்டிய தேவையும் உள்ளது.
மாகாணமட்டத்தில் சாதித்த வீர வீராங்கனைகள் தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளீர்கள். கடந்த காலங்களில் எமது மாகாணம் சுவீகரித்த பதக்கங்களை விட அதிகளவு பதக்கங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.- என்றார்.