வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் – கட்டுமானப் பணிகளுக்கு அதிகாரிகள் கள ஆய்வு!

வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை  துறைசார் அதிகாரிகள் இன்று நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

கள ஆய்வை வேலணை பிரதேச சபையின் தவிசாளர், வேலணை பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருடன் வேலணை பிரதேச செயலக அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், காணி அதிகாரி மற்றும் துறைசார் அதிகாரிகள் மேற்கொண்டனர். 

ஆய்வை மேற்கொண்ட அதிகாரிகள் வேலணை பிரதேசத்தில், இலங்கை நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகார எல்லைக்குள் அராலி சந்தியில் இருக்கும் அரச காணியை வேலணை பிரதேசம் மட்டுமல்லாது தீவகம் முழுவதுமான விளையாட்டுத் துறையின் நலன்கருதி தூரநோக்குள்ள பார்வையுடன் சில வரையறைகளுடன் குறித்த நிலப்பரப்பை வழங்குவதற்கு நீர்ப்பாசன திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் விளையாட்டு மைதானத்தை அமைப்பாதற்கான திட்டமுன்மொழிவுடன் கூடிய பொறிமுறைகளை தயாரித்து துறைசார் வழிமுறைகளூடாக அதை சமர்ப்பிக்குமாறும் வேலணை பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலணை பிரதேசத்தின் விளையாட்டுத்துறையை மெருகூட்டும் செயற்றிட்டத்தின் தொடர் நடவடிக்கையாக பொது மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை வேலணை பிரதேச சபையால் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது.

இந்நிலையில் தற்போது அதற்கான ஏதுநிலைகள் உருவாகியுள்ள நிலையில் மைதானத்தை அமைப்பதற்காக 4 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்படவுள்ளதுடன் குறித்த மைதான வளாகத்திற்குள் நவீன வசதிகளுடன் விளையாட்டு துறைசார் கட்டுமாணங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த நிலப்பரப்பு நீரேந்து பகுதியாக இருப்பதனால் நீர் சேகரிப்பு செயற்பாடகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *