பொலிஸ் பரிசோதகர் லிண்டனுக்குக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றக் கும்பல் தலைவர்

மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, தனது நெருங்கிய உதவியாளர் ஒருவரைக் கைது செய்ததற்காக கொலை மிரட்டல்  விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

இந்த தொலைபேசி அழைப்பை கெஹல்பத்தர பத்மே நேற்று (03) இரவு சுமார் 8.45 மணியளவில் மேற்கொண்டுள்ளார். 

கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளரான 39 வயதுடைய கம்பஹா தேவா என்ற நபர் விமான நிலையத்தில் வைத்து நேற்று  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் ரஷ்யாவிலும் தாய்லாந்திலும் பல சந்தர்ப்பங்களில் கெஹல்பத்தர பத்மேவை சந்தித்துள்ளதோடு, இம்முறை அவர் பத்மேவை சந்திப்பதற்காக தாய்லாந்து செல்ல திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். 

குறித்த சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும் அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல மற்றும் மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன. 

இவ்வாறான சூழ்நிலையில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட கெஹல்பத்தர பத்மே, 

“உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது,  நாங்கள் இறப்புச் சான்றிதழை எங்கள் கைகளில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் இறப்பதற்கு பயப்படவில்லை. என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியும்.” என்றார். 

இதற்கு பதிலளித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வா, 

“உன் மரண அச்சுறுத்தலுக்கு நான் பயப்படுவேன் என்று நினைக்காதே. இலங்கைக்கு வந்தால் இருவரும் பேசலாம். சட்டம் செயற்படுத்தப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *