”நாட்டில் பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோயுள்ள, அரச கட்டமைப்பினை சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்த ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்” எங்கள் நாட்டின் தற்போதைய நிலைமையைப் பார்த்தால் எம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?
நாங்கள் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளோம். கட்டளைகள் இயற்றப்பட்டுள்ளன. பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு பதவிகள் மாற்றப்பட்டுள்ளன.
ஆனால், நாம் திரும்பிப் பார்த்தால், நாம் அனைவரும் நம் மனசாட்சியுடன் நம்மை நாமே கேட்டுக்கொண்டால், இந்த அரச சேவையின் நிலையில் திருப்தி அடைய முடியுமா?
நம்மில் யாரும் இதில் திருப்தி அடைய முடியாது என நான் நினைக்கிறேன். நமது சொந்த அளவீடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சாதாரண குடிமக்கள் திருப்தி அடைகிறார்களா என்று கேட்போம். அவர்கள் திருப்தி அடையவில்லை. எனவே, நாம் ஒரு மிக முக்கியமான கட்டத்தை அடைந்த நேரத்தில் உங்களின் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப எம்மை மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியமானது, ஆம், நீங்கள் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளவில்லை என்றால், சமூகத்தால் நிராகரிக்கப்படுவீர்கள்.
எனவே, புதிய மாற்றங்களுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு நான் முதலில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மேசையில் உள்ள கணினி பழமையானது, எனவே,பௌதீக ரீதியான அரச சேவை சேதமடைந்துள்ளது. எனவே, ஒரு சேதமடைந்த அரச சேவையிலிருந்து ஒரு நவீன அரசை உருவாக்க முடியாது.
எனவே, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரச சேவையை நவீனமயமாக்க தேவையான வசதிகள் மற்றும் ஒத்துழைப்பை வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் விசேட கவனம் செலுத்துகிறோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.