ஜனாதிபதி தலைமையில் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை!

நாட்டின் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கூடுவது விசேட அம்சமாகும்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின்படி அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை நிறுவப்பட்டது.

இந்த சபை இறுதியாக கடந்த 2018 ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி கூடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அனர்த்தங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதிய போக்குகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கைகளுக்கான மைய செயல்பாட்டுடன் கூடிய ஒற்றை அமைப்பின் தேவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான தற்போதைய நிதி வரம்புகளை திருத்துதல்,
தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகள் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதியமொன்றை நிறுவவும் முன்மொழியப்பட்டதோடு இதற்கு சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அனர்த்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வீடுகளை அடையாளம் காண்பதை விரைவுபடுத்தவும், அந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றவும், அவர்களின் பாதுகாப்பை ஆராயவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா இந்த சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் அனர்த்த முகாமைத்துவ சபை உறுப்பினராக அவர் செயற்படவுள்ளதாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *