பொரளை துப்பாக்கிச் சூடு – காரணம் வௌியானது!

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ‘குடு சத்து’ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 23 வயது இளைஞன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் களனியைச் சேர்ந்த ‘பகடயா’ என்று அழைக்கப்படும் சுரேஷ் மதுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் இருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், டி-56 ரக துப்பாக்கியால் சுமார் 26 முறை சுட்டதாகவும், இதில் ஐந்து இளைஞர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில், சுரேஷ் மதுஷன் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மீதமுள்ள மூவரில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

இது குறித்து பொலிஸார் கூறுகையில்,” இந்த தாக்குதல் ‘குடு துமிந்த’ கும்பலால் நடத்தப்பட்டதாகவும், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘குடு சத்து’வின் சகோதரர் ஒருவர், நேற்று இரவு சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மற்ற இளைஞர்கள் சஹஸ்புர பகுதியைச் சேர்ந்த 21 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இத் தாக்குதல், டுபாயில் தலைமறைவாக உள்ள இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *