"நீதியின் ஓலம்" – வடக்கு கிழக்கில் ஐந்து நாள் தொடர் போராட்டம்!

“நீதியின் ஓலம்” எனும் கையொப்பப் போராட்டம் ஒன்று எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இதனை அறிவித்துள்ளது.  இது தொடர்பில் தாயகச் செயலணி அமைப்பு மேலும் தெரிவிக்கையில், 

நீதியின் ஓலம்” எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரியே இந்த கையொப்பப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கையொப்பப் போராட்டத்தின் ஊடாக  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

தமிழர்கள்மீது இனப்படுகொலை செய்த இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா தடை செய்தது போல தடையை ஏனைய நாடுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

“பயங்கரவாதத் தடைகள்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்குமுறைகளை நிறுத்தவும், நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.

கடந்த 76 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பை நிறுத்தி, ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு. வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்மக்களுக்கு வழங்கப்படும் தேச அதிகாரங்கள் எந்தக் காலத்திலும் மீளப்பெற முடியாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை சர்வதேசமும் ஐ.நா.வும் உறுதிப்படுத்த வேண்டும்.

போன்ற விடயங்களை வலியுறுத்தி, “நீதியின் ஓலம்” என்ற கையொப்பப் போராட்டம் 23.08.2025 சனிக்கிழமை காலை 10 மணி முதல் செம்மணியில் ஆரம்பித்து தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.

இந்தப் போராட்டம் வெற்றியடைய  அனைவரது பேராதரவும் ஒத்துழைப்பும் வழங்குமாறும் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *