யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஆறுச்சாமி, ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மனி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தின் தலைவர் நேருதாஸ், புரட்சிகர் இளைஞர் முண்ணனியின் மாவட்ட செயலாளர் மலரவன், சி.பி.எம்.ரெட் ஸ்டாரின் மாவட்ட பொறுப்பாளர் இனியவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர்.
செம்மணி மனித புதைகுழியில் கடந்த 05ஆம் திகதி அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள், குழந்தைகள், உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.