அடுத்தடுத்து 3 நாடுகளின் உயர்ஸ்தானிகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  அடுத்தடுத்து  அவுஸ்திரேலியா, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அந்தவகையில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் போல் ஸ்டீபன்ஸின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போதும் அதற்குப் பின்னரும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார். மேலும், கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய இராஜதந்திரிகள் பலர் இந்நாட்டிற்கு விஜயம் செய்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உயர் ஸ்தானிகர் வழங்கிய ஆதரவைப் பாராட்டினார்.

குறிப்பாக நாட்டின், சுற்றுலா, கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்தார்.

……………………….

இதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் (Eric Walsh) இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

கனடாவில் இலங்கை மக்கள் அதிகளவில் வசிப்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கும்,நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கச் செயல்முறைக்கும் கனடா வழங்கிய ஆதரவைப் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய ஆதரவு வழங்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

……………………………….

இதனையடுத்து  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் (Badli Hisham bin Adam) இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

விசேடமாக மலேசியாவின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் மற்றும் அண்மைய கால வெற்றிகள் குறித்த தனது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக மலேசிய உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *