
கொழும்பு, மார்ச் 12
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியு டன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏப்ரல் 9 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பு ஏப்ரல் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கை தற்போது அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஏதுவாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தப் பேச்சு இடம்பெறவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஸிலுடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்தப் பயணத்தில் இணைவாரா என்பது தெரியவில்லை. எனினும், நிதியமைச் சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல அமைச்சருடன் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதற்கு இலங்கை முக்கியமாக 3 நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்.
முதலாவது வரவு-செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையை 5 வீதத்திற்கு குறைவாக குறைக்கவேண்டும். இரண்டாவதாக, டொலரின் பெறுமதியை சுதந்திரமாக நிர்ணயிக்க அனுமதித்தல் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தல் ஆகியனவே இந்த முக்கிய நிபந்தனைகளாகும்.
அமெரிக்க டொலரின் விலைகளை இனி கட்டுப்படுத்தப்போவதில்லை என இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் அறிவித்தது. இதனால் நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 260 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை அதிக அளவில் குறைப்பதற்கு கடந்த 7ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி தீர்மானித் திருந்தது.
கடந்த சில மாதங்களாக இலங்கை யில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலையை 202.99 ஆக பேணி வந்தது. எவ்வாறாயினும், உண்டியல் மற்றும் ஹவாலா போன்ற முறைசாரா முறைகள் மூலம் டொலரின் மதிப்பு அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.





