யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா: இன்றைய திரையிடல்கள்

யாழ்ப்பாணம், மார்ச் 11

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுவரும் 7ஆவது யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழாவின் நான்காவது நாளிற்கான காட்சிப்படுத்தல்கள்;

இன்று காலை 10.00 மணிக்கு டேவிட் போன்வில்லேயின் ”த லாஸ்ற் பாத்” எனும் போர்த்துக்கல் நாட்டின் அறிமுகத் திரைப்படத்துடன் ஆரம்பிக்கின்றது. தேவாலயத்திற்காக வாழ்க்கையினை அர்ப்பணித்த கன்னியாஸ்திரியான ஜோசபினா, பராமரிக்க யாரும் இல்லாமல் தவிக்கும் அவளுடைய பதினைந்து வயது மருமகனை தத்தெடுக்கின்றாள். இதன் விளைவாக ஏற்படும் சிக்கலான உணர்வுப் போராட்டத்தை இத்திரைப்படம் முன்வைக்கின்றது.

அடுத்து பகல் 1 மணிக்கு ‘’ரோக்கிங் எபவுற் ற்றீஸ்‘’ எனும் பிரான்சிய-சூடானிய ஆவணத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இது சுஹைப் ஹஸ்பெல்மரி என்பவரால் சூடான் சினிமாவின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சூடானில் ஏற்பட்ட அடக்குமுறை ஆட்சியினால் திரையரங்குகள் மூடப்பட்டதுடன் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நாடு கடத்தப்பட்டனர். சில ஆண்டுகளின் பின்னர் சூடானின் பழைய சினிமாவைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடும் நான்கு நண்பர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் எதிர்ப்புகள், அவற்றை எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்பது பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.

மாலை 4.45க்கு திரையிடப்படவுள்ள ‘’நோற்றே டாமே டியூ நில்‘’ திரைப்படமானது, ஸ்கோலஸ்கியூ முகஸ்ம்கா என்பவரின் நாவலைத் தழுவி பிரான்ஸ்-பெல்ஜியம்-ருவாண்டா கூட்டிணைப்பில் அற்றிக் ரஹ்மி என்பவரால் இயக்கப்பட்டது. 1973 இல் ஒரு கத்தோலிக்க பாடசாலையில் உள்ள மாணவர் விடுதியில் ருவாண்டாவைச் சேர்ந்த பெண்கள் சார்ந்து நடைபெறும் நிகழ்வுகளைச் சித்தரிப்பதுடன், அந்நிகழ்வுகள் 1994 இல் ருவாண்டாவில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் நிகழ்ந்த இன அழிப்புக்கு இட்டுச் சென்றதைப் பேசுகின்றது.

அத்துடன், நண்பகல் 12.00 மற்றும் பிற்பகல் 3.30க்கு விருதுக்காகப் போட்டியிடும் இலங்கை, இந்தியா, ரசியா, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் குறுந் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இக்காட்சிகள் அனைத்தும் இலவசம். சினிமா ரசிகர்கள் அனைவரையும் இக்காட்சிகளில் பங்குபற்றித் திரைப்படங்களினைப் பார்த்து மகிழுமாறு விழாக் குழுவினர் அழைத்து நிற்கின்றனர்.

Leave a Reply