பொன் அணிகளின் போரில் சென். பற்றிக்ஸ் முன்னிலை: இன்று இறுதிநாள்

யாழ்ப்பாணம், மார்ச் 12

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 35 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி.

பொன் அணிகளின் போர் என்று வர்ணிக்கப்படும் சென். பற்றிக்ஸ் – யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி நேற்று ஆரம்பமானது.

105ஆவது போட்டியாக சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரியின் தலைவர் வெஸ்டின் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.

இதனால், முதலில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 57.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த அந்த அணி 98 ஓட்டங்களைப் பெற்றது.

இதில், பிருந்தன் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். கீதவற்சன் 16 ஓட்டங்களையும், பிரதீப் 13 ஓட்டங்களையும் எடுத்தனர்.

சென். பற்றிக்ஸ் கல்லூரி சார்பில் அசத்தலாக பந்து வீசிய அணித் தலைவர் வெஸ்டின் 19 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்தார். சமுத்திகன், மதீசன், சாருஜன் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி நேற்றைய நாள் ஆட்டம் முடிவடைந்த போது 40 ஓவர்கள் நிறைவில் 133 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருந்தது. அபாரமாக ஆடிய உப அதிரடியாக ஆடிய கீர்த்தன் 59 ஓட்டங்களை குவித்தார். சவுத்ஜன் 27 ஓட்டங்களையும் அணித் தலைவர் பெஸ்டின் 3 சிக்ஸர்களுடன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

யாழ்ப்பாணக் கல்லூரியின் பந்துவீச்சில் பிருந்தன் 3 விக்கெட்களையும், சாந்துஷன், கீதவற்சன், மதீசன், நர்த்தனன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இன்று போட்டியின் இரண்டாம் மற்றும் இறுதி நாளாகும். காலை 9.20 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

Leave a Reply