இலங்கை அரசாங்கம் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக ஏற்க மறுத்து வந்துள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கெர் டேர்;க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல் புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவித்தல் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல் மற்றும் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்தல் அதன் நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் நிலைமாறுகால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் என என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கை குறித்த அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ஈடுபாடு இன்றியமையாததாக உள்ளது மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கு உறுதுணையாக இருக்க முடியும். சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் முதன்மை பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது என்றாலும் இதை சர்வதேச வழிமுறைகளால் பூர்த்தி செய்து ஆதரிக்க முடியும். என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்
மாற்றத்திற்கான அடித்தளங்களை நடைமுறைப்படுத்தவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும்கடந்தகால மோதல்களிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவும் நிலையான சமாதானம் மற்றும் தேசிய ஐக்கியத்திற்கான அடித்தளத்தை இடவும் கிடைத்துள்ள வரலாற்று சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குதல்சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல்பாரபட்சம் மற்றும் பிரிவினைவாத அரசியலை முடிவிற்கு கொண்டுவருதல் போன்ற நீண்டகால பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது புதிய திசையில் பயணிப்பதற்கு தலைமைத்துவம் உறுதிவழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசநிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த அர்ப்பணிப்புகளை உறுதியான நடவடிக்கைகளுடன் ஒரு ஒத்திசைவான காலக்கெடு திட்டமாக மாற்றவேண்டும் என ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதிவழங்குவதும் இதில் உள்ளடங்கியிருக்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு போரின் போது மீறல்கள் துஸ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களிற்கு அரசபடையினரும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற அரசசாரா தரப்பினரும் காரணம் என்பதை தெளிவாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுதலுடன் இதனை ஆரம்பிக்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான எனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை துன்பத்தை நான் தெளிவாக பார்த்தேன் என தெரிவித்துள்ள அவர் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களின் வேண்டுகோள்களிற்கு தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளார். தேசிய ஐக்கியம் பற்றிய அரசாங்கத்தின் நோக்கினை சாத்தியமாக்குவதற்கு இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அனைத்திற்கும் அப்பால் கடந்தகால மீறல்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் பாரிய மனித உரிமைமீறல்கள் சர்வதேச சட்;ட மீறல்களிற்கு தீர்வை காணபதற்கு அர்ப்பணிப்புள்ள நீதித்துறைபொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்குகிழக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். நீண்டகால பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு வெளியேயும் உள்ளேயும் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளிற்கு சர்வதேச சமூகம் தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சர்வதேச சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வழக்குதொடுப்பதற்கான பொறுப்பு முக்கிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்குரியது என்றாலும் இதனை சர்வதேச வழிமுறைகளால் ஆதரிக்க முடியும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் வலுப்படுத்தப்பட்ட திறனை பயன்படுத்தி பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும் நல்லிணக்க முயற்சிகளிற்கு பங்களிப்பதற்கும் ஐநா உறுப்பு நாடுகளை மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.