மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick )மற்றும் துணை உயர்ஸ்தானிகர் தெரசா ஓமஹோனி (Theresa O’Mahony)ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது இலங்கையின் அனைத்து பிராந்தியங்களையும் மற்றும் வேலைத்தளங்களையும் உள்ளடக்கும் வகையில், தரமான சிறுவர் பராமரிப்பு மையங்களை (Day-care centers ) நிறுவுவதன் தேவையை அரசு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதற்காக, அரசின் கீழ் இயங்கும் சிறுவர் பராமரிப்பு மையங்களை தொடங்கும் திட்டம் குறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது குறித்த திட்டத்திற்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் துறை அறிவை வழங்குவதற்கான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
அத்துடன் இத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும், தேவையான உதவிகளை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும், இது இலங்கை மற்றும் பிரித்தானியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இருக்கும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், துணை உயர்ஸ்தானிகரும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.