நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியிலுள்ள ஒரு கற்குகைக்குள் இரண்டு சிறுத்தைப் புலிகள் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, காலை வேளைகளில் கற்குகையிலிருந்து சிறுத்தைப் புலிகள் வெளியேறி நடமாடுவதாகவும், இதனால் அப்பகுதியில் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பயத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் சிறுத்தைப் புலிகளுக்கு இரையாக்கப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் நாய்களின் எச்சங்கள் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுத்தை புலிகளின் நடமாட்டம் தொடர்பாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.