கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது.
குறிப்பாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கம் மற்றும் கிளிநொச்சி, மன்னார் உட்பட நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்குகளின் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள 08 நிறுவனங்களின், 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுப் பணிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்துவதில் திருப்தி அடைய முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,
இந்த நிதியாண்டில் அந்த ஒதுக்கீடுகளை முறையாக முடித்து மக்களுக்கு நன்மைகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பாடசாலை மட்டத்திலான விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு, விளையாட்டு மேம்பாட்டிற்கான புதிய விரிவான திட்டத்தை விரைவில் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேலும் அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற 2025 தேசிய இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்கேற்புடன் இளைஞர் விவகார அமைச்சினால் செயல்படுத்தப்பட வேண்டிய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.