வடக்கு – கிழக்கில் நாளை ஹர்த்தால்! காலையில் மட்டும் முன்னெடுப்பு சுமந்திரன் அறிவிப்பு!

வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

நாளை வடக்கு, கிழக்கில் நாம் நடத்தும் ஹர்த்தால் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு, கிழக்கைப் போன்று நாட்டின் எப் பகுதியிலும் மக்கள் மத்தியில் இராணுவப் பிரசன்னம் கிடையாது. நாங்கள் இந்தக் ஹர்த்தால் மூலம் வெளிக்கொணர இருக்கும் முக்கிய விடயம் என்னவெனில் சாதாரண மக்களுடைய வாழ்க்கையில் இடையூறு செய்யும் விதமாகவே இந்த இராணுவ மயமாக்கல் இடம்பெறுகின்றது என்பதனை நாம் தொடர்ச்சியாகக் கடந்த 16 வருடங்கள் சொல்லி வருகின்றோம்.

அனுமதியின்றி சிலர் இராணுவ முகாமுக்குள் நுழைந்தார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்தபோது ஒருவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார் என்றும், மரண விசாரணை முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். நீதிமன்ற நடவடிக்கை இருக்கும்போது நீரில் மூழ்கி மரணம் எனக் கூற முடியாது.

இதேதேரம் பொலிஸ் பேச்சாளரின் தகவலின்படியே ஒரு இராணுவ வீரர் இந்த ஐந்து பேரையும் தாக்கிக் காயப்படுத்தினார் என்ற காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டதாகவும் கூறுகின்றார். உயிரிழந்த இளைஞர் தாக்கி மரணமடைந்தாரா, தாக்கியதால் குளத்தில் பாய்ந்தாரா போன்ற விடயங்கள் எல்லாம் வெளிவர வேண்டும். இதேநேரம் ஏனைய இரு இராணுவத்தினரும் மேற்படி ஐவரையும் அழைத்து வந்தவர்கள் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொலிஸ் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

இராணுவம் வாழும் சூழலை இராணுவத்தை அண்டி வாழும் சூழலை ஏற்படுத்துகின்றனர் என்பதனைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தவே இந்தக் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

எவருக்கும் தடங்கல் ஏற்படுத்தவோ, அவர்களைச்  சிரமப்படுத்தவோ இந்தக் ஹர்த்தாலைச் செய்யவில்லை. இது தொடர்பான அரச ஊடக சந்திப்பில் இராணுவப் பேச்சாளர் ஒன்றையும், பொலிஸ் பேச்சாளர் ஒன்றையும் கூறுகின்றனர். அமைச்சர் வேறு ஒன்றைக் கூறுகின்றார். இதை வெளிப்படுத்தியே ஹர்த்தால் இடம்பெறுகின்றது என்பதனை வடக்கு, கிழக்கு மக்களுக்கும் விசேடமாக வர்த்தக உரிமையாளர்களுக்கும் எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம்.

இதேநேரம் பலரின் கோரிக்கையின் பெயரில் ஹர்த்தாலை முழுமையாகப்  பேணும் அதேநேரம், இதைப் பலரின் நன்மை கருதி காலையுடன் மட்டும் முடித்துகொள்ளலாம். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் மாலையில் இடம்பெறுவதும் கருத்தில் கொள்ளப்பட்டு இந்த முடிவு எட்டப்படுகின்றது.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *