செம்மணி படுகொலை நீதி கோரி ஒன்றிணைந்த தமிழர் தரப்புக்கள்!

செம்மணியின் அவலங்களுடன்  இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதி கோரி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

குறித்த போராட்டத்தை முன்னிறுத்தி ஜனநாயக  தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி, ரெலோ, புளெட், ஈ.பி.ஆர். எல்.எவ், ஆகிய கட்சிகள் கூட்டு ஊடக சந்திபொன்றை யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் மேற்கொண்டு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், சமத்துவ கட்சியின் பொது செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோருடன் தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்  கலந்துகொண்டு ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது,

இலங்கையில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலன புதைகுழிகள் வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.

தற்போது செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அதில் 140க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலையே மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகளின் எழும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு சர்வதேச விசாரணைகள் கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *