முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி.
சிகிச்சை முடிந்ததும் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று மாலை பிணை வழங்கியது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை காரணமாக அவர் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலையாகவில்லை.
எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஜூம் தொழில்நுட்பம் மூலம் அவர் முன்னிலையானார்.
விசாரணையின் பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியை தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று பிணைகளில் விடுவித்தது.
மேலும் வழக்கு விசாரணை ஒக்டோபர் 29 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி பதவி காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியல் காலத்தில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.
தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.