கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை கூறினார்.
“கச்சத்தீவை மீட்டு தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்” என, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜித ஹேரத் பதில் அளித்தார்.
தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம் ஏற்பட்டுள்ளதால், தமது அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர்.
அவ்வாறான அரசியல் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை,
இராஜதந்திர மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவை, இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருப்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது அவதானித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.