அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான மினியாபோலிஸில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த வன்முறையில் மேலும் 17 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டை உள்நாட்டு பயங்கரவாதச் செயலாகவும், கத்தோலிக்கர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வெறுப்பு குற்றம் என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI கூறியுள்ளது.
குறித்த கத்தோலிக்கப் பாடசாலையில் புதன்கிழமை (27) காலை ஒரு தேவாலயத்தின் ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, இருக்கைகளில் அமர்ந்திருந்த 8 வயது மற்றும் 10 வயது சிறுவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையின் முதல் வாரத்தைக் குறிக்கும் திருப்பலியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயமடைந்தனர் என மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரி பிரையன் ஓ’ஹாரா உறுதிபடுத்தினார்.
அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே சுட்டுக் கொண்டதால் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 23 வயதான ராபின் வெஸ்ட்மேன் என FBI அடையாளம் கண்டுள்ளது.
அவர் ரொபர்ட் வெஸ்ட்மேன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தெற்கு மினியாபோலிஸின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கத்தோலிக்க பாடசாலையில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
தாக்குதல் நடத்தியவரின் தாயார் மேரி கிரேஸ் வெஸ்ட்மேன், முன்பு இந்தப் பாடசாலையில் பணிபுரிந்ததாக 2016 ஆம் ஆண்டு பாடசாலை செய்திமடல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் தாக்குதல் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.