கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

கேரளாவின் கொச்சியில் இளம் ஐ.டி., ஊழியரை கடத்திச் சென்ற சம்பவத்தில், நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்பு இருக்கிறதா எனப்  பொலிஸார்  தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்தல் தொடர்பாக லட்சுமி மேனனின் நண்பர் உட்பட மூன்று பேரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருபவர் லட்சுமி மேனன். கேரளாவில் உள்ள சொந்த ஊரான கொச்சியில் வசித்து வருகிறார்.

கடந்த 24ம் திகதி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் லட்சுமி மேனன் நண்பர்களுக்கும், ஐ.டி., ஊழியர்கள் சிலருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின், ஐ.டி., ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற காரை, நடிகை லட்சுமி மேனனும், அவரது நண்பர்களும் வழிமறித்துள்ளனர். தொடர்ந்து ஐ.டி., ஊழியர்களிடம் வாக்குவாதம் நடத்தியுள்ளனர். இது தொடர் பான வீடியோ சமூகவலைதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அந்த காரில் இருந்த ஒரு ஐ.டி., ஊழியரை லட்சுமிமேனனின் நண்பர்கள் கடத்திச் சென்று தாக்கிவிட்டு பின்னர் விடுவித்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், இளம் ஐ.டி., ஊழியரை கடத்திச் சென்றபோது, அந்த காரில் நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை கொச்சி பொலிஸ் கமிஷனர் புட்டா விமலாதித்யாவும் உறுதி செய்துள்ளார். கடத்தல் மற்றும் தாக்குதலில் லட்சுமி மேனனுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விரிவாக விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகை லட்சுமிமேன் தலைமறைவாகி உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *