பண்பாடு தொலைந்து போகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை – வடக்கு ஆளுநர்!

பண்பாடு தொலைந்துபோகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை. காலத்தின் தேவையறிந்து இந்தப் பண்பாட்டு விழாக்களை தொடர்ந்து நடத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா – 2025 இன்று வியாழக்கிழமை காலை (28) மன்னார் நகர மண்டபத்தில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் உண்டு. ஆனால் இன்று அவை மறக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. அவற்றை நாம் மறக்கக் கூடாது. நல்ல மாற்றங்களை உள்வாங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும்.

பலனை எதிர்பாராமல் இந்தச் சமூகத்துக்காக எமது பண்பாடு – கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மூத்த கலைஞர்களை கௌரவிப்பது சிறப்பானது. மூத்த கலைஞர்களை கௌரவிப்பதுடன் அவர்களின் அனுபவங்களை எமது அடுத்த தலைமுறைக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் மன்னெழில் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் மன்இளம் கலைச்சுடர் விருது 6 பேருக்கும், மன்கலைத்தென்றல் விருது 5 பேருக்கும், மன்கலைச்சுரபி விருது 5 பேருக்கும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.

பண்பாட்டு பெருவிழாவில், பல்வேறு கலைஞர்களால் பல நிகழ்வுகளின் ஆற்றுகைகள் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *