வடக்கு மாகாணத்தின் விசேட மகளீர் சிகிச்சை மையத்தை செயற்படுத்துமாறு கோரி போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில், வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதனை கண்டித்தும்,  ஆதனை விரைவாக செயற்படுத்த கோரியும் கண்டன போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் இன்று  கண்டன போராட்டம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

நெதர்லாந்து அரசாங்கத்தின் பல மில்லியன் ரூபா நிதியில்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையமானது அதி நவீன வசதிகளுடன் நவீன மருத்துவ உபகரணங்களுடனும் அமைக்கப்பட்டு 2024 மே மாதம் அன்றைய ஐனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த சிகிச்சை மையம் திறக்கப்பட்டு ஒரு வருடத்தினை கடந்தும் இன்று வரை எந்தவொரு செயற்பாடும் இன்றி காணப்படுகிறது. 

இந்த சிகிச்சை மையத்தில் இரண்டு மகப்பேறு மற்றும் பிரசவ விடுதிகள், பெண் நோயியல் விடுதிகள், நவீன

வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை கூடம், மகப்பேறு தீவீர சிகிச்சைப் பிரிவு, கருவள பெருக்கம் சிகிச்சைப் பிரிவு,  நோயாளர் கிளினிக் வளாகம் போன்றவற்றை கொண்டு அமைந்ததுள்ளது.

எனவே இந்த சிகிச்சை மையம் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது  இதுவரை காலமும் வடக்கு மாகாண்தில் இருந்து மேற்படி சிகிச்சைகளுக்கு கொழும்புக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சென்று வந்த பெண்கள் தங்களது காலடியிலேயே சிகிச்சை பெறும் சூழல் உருவாகும்.  

இதனை தவிர வடக்கு மாகாண பெண்கள் மட்டுமன்றி எமது மாகாணத்தின் அருகில் உள்ள மாகாண பெண்களும் இதன் பயனை பெறுவார்கள்.

எல்லா வசதிகளும் இருந்தும் தாதியர்கள் உள்ளிட்ட ஆளனி வளம் இன்மையே இந்த சிகிச்சை மையத்தை இயங்க வைக்க முடியாதுள்ளது. 

தொடர்ச்சியாகசெயற்பாடின்றி காணப்படுமாயின்  இங்குள்ள பெறுமதிக்க மருத்துவ உபகரணங்கள்

கூட  பழுதடைய கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். 

அத்தோடு,  இந்த மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு இன்மையை காரணம் காட்டி, நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த உபகரணங்களை வழங்குவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகிறது. 

வடக்கு வாழ் மக்களுக்கு என வழங்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணங்களை எக்காரணம் கொண்டு  வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் வடக்கு மாகாண ஆளுநர், மத்திய சுகாதார அமைச்சர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *