ஹராரேவில் நேற்று (29) நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க இறுதி ஓவரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவரின் இறுதி ஓவர் ஹெட்ரிக்குடன் இலங்கை அணி அந்த ஆட்டத்தில் ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்வேயை தோற்கடித்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெற்றது.
போட்டியில் இறுதி ஆறு பந்துகளில் சிம்பாப்வேக்கு வெற்றி பெற 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
குறித்த ஓவருக்காகப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட மதுஷங்கா முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இலங்கைக்கு சாதகமாக மாற்றினார்.
இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் வீழ்த்திய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளர் என்ற பெருமையை 24 வயதான இடது கை வேகப் பந்து வீச்சாளர் பெற்றார்.
லசித் மலிங்க (3) மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்காக முன்னதாக ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளனர்.
மதுஷங்க 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக தனது முதல் ஹெட்ரிக் சாதனையைப் படைத்தார்.
இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 01.00 மணிக்கு ஹராரேவில் ஆரம்பமான போட்டியில் சிம்பாப்வே நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது.
இலங்கை தொடக்க வீரர் பத்தும் நிஸ்ஸங்க 92 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்து, நல்ல தொடக்கத்தை வழங்கினார்.
குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருடன் இணைந்து அவர் முக்கியமான இணைப்பாட்டங்களை உருவாக்கினார்.
பின்னர் ஜனித் லியனகே (70*) மற்றும் கமிந்து மெண்டிஸ் (57) ஆகியோர் இலங்கை அணிக்கு பெரிய ஓட்ட இலக்கினை நிர்ணயிப்பதற்கு பிரதான பங்காற்றினர்.
அவர்கள் டெத் ஓவர்களில் விறுவிறுப்பான வேகத்தில் ஓட்டங்களை எடுத்தனர்.
இதனால், தொடக்கத்தில் தடுமாறிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
பிரையன் பென்னட் மற்றும் பிரெண்டன் டெய்லர் இருவரும் ஓட்டம் எடுக்காமல் அஷித பெர்னாண்டோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் பென் கரன் மற்றும் சீன் வில்லியம்ஸ் மூன்றாவது விக்கெட்டுக்கு 118 ஓட்டங்களை சேர்த்தனர் – இருவரும் தங்கள் அரைசதங்களை அடித்து சிம்பாப்வே அணியை நிலைநிறுத்தினர்.
அவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர், சிம்பாப்வேயின் நட்சத்திர சகலதுறை வீரர் சிக்கந்தர் ராசா ஆட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டார்.
அவரின் பங்களிப்புடன் சிம்பாப்வே அணி வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியபோது,
இருப்பினும், கடைசி ஓவரின் முதல் பந்தில் மதுஷங்காவால் அவர் ராசா 92 ஓட்டங்களுடன் வெளியேற்றப்பட்டார்.
இது இலங்கையின் வெற்றியை உறுதி செய்வதற்கான தொடக்கமாக அமைந்தது.
பின்னர், அடுத்தடுத்த ஆட்டமிழப்புகளுடன் சிம்பாப்வே 50 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக மதுஷங்க தெரிவானார்.
ஹராரேவில் நாளை நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.