மண்டைத் தீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழா நாளைய தினம் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வினை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.
அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதேவேளை, யாழ் வருகை தரவுள்ள ஜனாதிபதி, காணி விடுவிப்பு, தையிட்டி விகாரை பிரச்சனை, பலாலி வீதி முழுமையாக திறந்து விடல் போன்றவற்றுக்கு தீர்க்கமான முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட்டு, புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.