சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர் கைது!

இலஞ்சம் பெறுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதகல் பகுதியில் நேற்று ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில் பின்னர் அவரை கைது செய்யாமல் விடுவதற்காக 30 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர் 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதாக ஒப்புக்கொண்டதையடுத்து அவரை விடுவித்துள்ளனர்.

மேலும் லஞ்ச பணத்தினை சித்தங்கேணி பகுதியில் உள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டுவருமாறு அறிவித்துள்ளனர்.

எனினும் போதைப்பொருள் மோசடியாளர்கள் இதுகுறித்து காங்கேசன்துறை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் குறித்த பணத்தினை வழங்குவதற்கு முயற்சித்தவேளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் தலைமையின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *