
இலங்கையில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டின் காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவின் தரம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துர்நாற்றம், நிறம் அல்லது வித்தியாசமான வடிவத்தில் இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்வதையோ அல்லது கொள்வனவு செய்வதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
கடந்த இரண்டு வாரங்களில், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற இறைச்சி மற்றும் பாலை தொடர்ந்து விற்பனை செய்த 387 கடைகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து ஏழு மணி நேர மின்வெட்டு காரணமாக குளிர்சாதன பெட்டிகள் செயற்படாததால் உணவுப் பொருட்கள் பழுதடைகின்றது.
கடைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் அவதானமாக இருக்க வேண்டும்.
அத்துடன் வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது பொறுப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




