இலங்கையில் எந்தவித போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை! பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்தால் சர்ச்சை; வலுக்கும் கண்டனம்

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவரது கருத்து தொடர்பில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற இல்லை.  போரிலே சில அசம்பாவிதங்கள் இடம்பெற்று இருக்கலாம். அதற்காக மனித உரிமை மீறல்கள் இடம் பெற்று இருக்கிறது என்று எண்ணிவிடக் கூடாது என்கிற அடிப்படையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தனது கருத்தை கூறி இருக்கிறார்.

இன்று செம்மணி மனித புதைகுழிகள் சாட்சிகளாக கருதப்படுகின்ற நிலையிலே செம்மணி மனித புதைகுழி கூட மனித உரிமை மீறலாக இருக்காது என்கிற அடிப்படையில் பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கள் அமைந்துள்ளது. 

அதனடிப்படையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் இக் கருத்தை தெரிவித்தமையானது கண்டனத்திற்குரிய விடையம். 

இந்த அரசு செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை செய்வதாக கூறுகின்ற நிலையில் இன்னும் ஒரு கருத்தாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது சபாநாயகர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. அவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல்பாட்டில்  குறிப்பாக அவர் ராணுவத்தின் உயர் பதவியில் இருந்த காரணத்தினால் குறித்த சம்பவத்துடன் அவர் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த கருத்துக்களை வைத்துப் பார்க்கின்றபோது அவர் உண்மையில் மனித உரிமை மீறல்களில் சம்மந்தப்பட்டுள்ளாரா? என்கிற சந்தேகம் அவரது கருத்து ஊடாக எழுந்துள்ளது.

ஆகவே தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டுள்ள அநீதிகள், கொடுரங்கள், படுகொலைகள் அத்தனையும் உண்மை இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது. இக்கருத்து தமிழ் மக்களின்  மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அரசாங்கம் அவரை   இடைநிறுத்தி உயிர்த்த ஞாயிறு சம்மந்தமாகவும், ஏனைய விடயங்கள் சம்மந்தமாகவும் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன் வைக்கின்றேன்.

மனித உரிமை மீறல்கள் இடம் பெறவில்லை. போரிலே அசம்பாவிதங்கள் இடம் பெற்று இருக்கலாம் என்று கூறுகின்ற, அனைத்து உண்மைகளையும் மூடி மறைக்கும்  வகையில் அவரது கருத்து கூறுகிறது.

எமது தேசத்தில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள், வயோதிர்கள் என பார்க்காது கொடுரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட வரலாறு இன்று எழுதப்படுகின்ற வகையிலே செம்மணி மனித புதை குழி காணப்படுகின்றது. ஆகவே ஐ.நா.சபையும் தனது கருத்தை கூறியுள்ளது.

உள்ளக விசாரணையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே பிரதிஅமைச்சர் குறித்த விடயம் தொடர்பில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *