இலங்கை மீனவர்களின் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் கையளிக்கவுள்ள இந்திய மீனவர்கள்!

யாழ்ப்பாணம் மீனவர் சங்கத்தினர், தமிழக முதலமைச்சருக்கு தங்களுடைய கோரிக்கையை கடிதமாக எழுதி, அக் கடிதத்தை இந்திய மீனவர்களிடம் கொடுத்து அதை முதல்வருக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களை காக்கும் காவல் தெய்வமாக கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் விளங்குகிறார் என்பது மீனவர்கள் நம்பிக்கை.

கடலில் தங்களைக் காக்கும் காவல் தெய்வமான புனித அந்தோணியாருக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தி தங்களுடைய நன்றியை தெரிவிப்பது இருநாட்டு மீனவ மக்களின் வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா நேற்றும் இன்றும் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இலங்கையில் இருந்து 75 பக்தர்களும், ராமேஸ்வரத்திலிருந்து எழுபத்தி ஆறு பக்தர்களும் கச்சதீவிற்குச்சென்றனர்.

நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நற்கருணைப் பெருவிழா மற்றும் சிலுவைப்பாதை மற்றும் புனிதரின் தேர்பவனியுடன் நிறைவு பெற்றது.

இன்று காலை திருவிழா திருப்பலி மிக சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப்ஜெபரத்தினம் தலைமையில் நடைபெற்ற திருவிழா திருப்பலியில் ராமேஸ்வரம் பங்குத்தந்தை தேவசகாயம் மற்றும் இலங்கை இந்திய அருட்பணியாளர்களும் பக்தர்களும் கலந்துகொண்டு தங்களுடைய நன்றியை தெரிவித்து புனிதரை போற்றி வணங்கினர்.

பிற்பகல் இருநாட்டு பக்தர்களும் தங்கள் அன்பையும் நட்பையும் புதுப்பித்துக்கொண்டு விடைபெற்று திரும்பினர்.

முதல் நாள் மாலை இலங்கை நீர்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்திய – இலங்கை இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மீனவர்கள் மீன்பிடிப்பில் தங்களுக்குள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினர். சுமுகமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கடல் வளத்தை காக்க ஒரு குழு அமைக்கப்பட்டதுடன், இலங்கை – இந்திய அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அதில் சுமூக முடிவு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம் மீனவர் சங்கத்தினர் தமிழக முதலமைச்சருக்கு தங்களுடைய கோரிக்கையை கடிதமாக எழுதி அனுப்பியுள்ளதாகவும், அதே கோரிக்கை கடிதத்தை இந்திய மீனவர்களிடம் கொடுத்து அதை முதல்வருக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தமிழக முதல்வர் நிரந்தர தீர்வுகாண முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தை முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்க இருப்பதாக பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply