மித்தேனிய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, அவை ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செப்டம்பர் 6 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க ஆகியவர்கள் இந்நாட்டில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்களை மித்தேனிய பகுதியிலிருந்து மேற்கு வடக்கு குற்றப்பிரிவு மீட்டது.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெகோ சமனிடம் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், குறித்த இரசாயன மாதிரிகள் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அறிக்கையில், 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (19) அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஆய்வறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த அறிக்கையும் மித்தேனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுபவை என உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




