ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு மதிப்பளித்து ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதில் பங்கேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான் அரசியலுக்கு வர முன்னர் கோடிகளில் காணப்பட்ட வருமானம், அரசியலுக்குள் பிரவேசித்த பின்னர் வங்கிக் கடனில் செல்கிறது.
ஆனால் ஆளுந்தரப்பினருக்கு உண்ண உணவும் உடுத்த ஆடையும் இன்றி இருந்த காலம் மாறி தற்போது அவர்கள் தனவந்தர்களாகவுள்ளனர். இது இன்று சமூகத்தில் பாரிய கேள்வியாகவுள்ளது. நாமும் எமது சொத்து பிரகடனத்தை வழங்கியிருக்கின்றோம்.
சொத்து பிரகடனம் வெளியிடப்பட்ட பின்னர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களுக்கு அப்பால் ஜே.வி.பி. கடந்த காலங்களில் எந்தளவுக்கு பொய் கூறி மக்களை ஏமாற்றியிருக்கிறது என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது.
2020இல் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஏமாற்றமடைந்த மக்கள் தற்போது அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனாலும் மக்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதில் பங்கேற்ற தீர்மானித்துள்ளார். கட்சி உறுப்புரிமைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாம் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளோம். ஒரே சந்தர்ப்பத்தில் இருவேறு கட்சிகளின் அங்கத்துவம் வகிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. என்றார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் இவ் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.