வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீதியில் அமைந்திருக்கும் முன்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றிலிருந்து கடற்படையினர் தினமும் தண்ணீரை எடுத்து செல்கின்றனர். இதனால் தண்ணீர் வளம் பாதிக்கப்படுவதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.நாகரஞ்சினி சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
வலிகாமம் மேற்கு பிரதேசத்துக்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காணப்படுகின்றது. பிரதேச சபையினால் மக்களுக்கு கொடுப்பதற்கே தண்ணீர் போதாமல் இருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில் கடற்படையினர் ஊருக்குள் வந்து தினமும் 10 ஆயிரம் லீற்றர்களுக்கும் அதிகமான தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு தினமும் அதாகளவான தண்ணீரை எடுத்து செல்வதால் வளம் பாதிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை இனிமேல் கடற்படையினர் எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது என்பதனை எனது பிரேரணையாக முன்வைக்கிறேன்.
எனவே இந்த விடயம் குறித்து உரிய கடற்படை முகாமுக்கு பொறுப்பான அதிகாரிக்கு பிரதேச சபையினால் கடிதம் அனுப்ப வேண்டும் என்றார்.
இதேவேளை அராலி ஆலடி பகுதியில் உள்ள வயற்காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து அராலித்துறை இராணுவ முகாமுக்கு தினமும் மூன்று தடவைகள் 30 ஆயிரம் லீட்டர்களுக்கும் அதிகமான தண்ணீர் எடுக்கப்படுகிறது.
முன்னர் அந்த வயற்கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரையே மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இராணுவத்தினர் இவ்வாறு தினமும் தண்ணீர் எடுப்பதால் அந்த கிணற்று நீர் உவர் நீராக மாறியுள்ளது. இப்போது அப்பகுதி மக்கள் கட்டணம் செலுத்தி பிரதேச சபையிடமிருந்தே தண்ணீரை பெறுகின்றனர்.
இருப்பினும் பிரதேச சபையினாலும் மக்களுக்கான தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
இவ்வாறு தினமும் தண்ணீரை எடுப்பதால் அந்த கிணற்றில் மாத்திரமல்லாது அயலில் உள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகளது விவசாயமும் பாதிப்படையக்கூடிய அபாயம் காணப்படுகிறது.என்றார்.