இந்திய கம்பனிகளின் திருட்டு; அபகரித்த நிலத்தை மீள தரக்கோரி முத்து நகர் விவசாயிகள் சத்தியாக்கிரகப் போராட்டம்

 

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக்கோரி மூன்றாவது நாளாகவும் இன்று (19)திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது கூட சத்தியாக் கிரகப் போராட்டத்தில் குறித்த விவசாயிகள் ஈடுபட்டனர். 

அண்மையில் விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு இலங்கை துறைமுக அதிகார சபையினர் இணைந்து வழங்கியுள்ளதையடுத்து குறித்த முத்து நகர் விவசாயிகள் பல போராட்டங்களை நடாத்திய போதும் வெற்றியளிக்கவில்லை. 

ஜனாதிபதி செயலகம் முன்பாகவும் போராட்டம் நடாத்தியுள்ள நிலையில் தற்போது சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

தங்களுடைய விவசாய நிலங்கள் தங்களுக்கு வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து, கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்துநகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு, இந்திய கம்பனிகளின் நில மற்றும் வளத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குவோம் போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதில் கலந்து கொண்ட முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கருத்து தெரிவிக்கையில்,

முத்து நகர் விவசாய சம்மேளனங்கள் கடந்த 150 வருடங்களாக பாவித்த விவசாய நிலங்களை பெற்றுக் கொள்ள என்னை விவசாயிகள் அழைப்பு விடுத்தார்கள். இருந்த போதிலும் உரிய மாவட்ட  அபிவிருத்தி குழு தலைவரை சந்திக்க முடியவில்லை. 

மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரே அங்கு இருந்தார். அது சாத்தியமாகவில்லை. முத்து நகர் பிரதேச முதல் குடியேற்றம் 1973ல் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களால் ஆயிரக்கணக்கான விவசாயிகளை விவசாயம் செய்ய கிணறுகள் வீடுகளை அமைத்து 1972,1973 தொடக்கம் 1977 வரை ஐந்து வருடங்களாக வழங்கியிருந்தார் அதன் பிற்பாடு, துறை முக அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி அவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இரு முறை தாக்குதளுக்கு உள்ளானபோது மக்கள் குடியிருப்பு காணிகளை சுமார் பத்தாயிரம் ஏக்கர் காணிகளை துறை முக அதிகார சபைக்கு வழங்கினார்.

இதன் பின் அமைச்சர்களாக வந்த எம்.எச்.எம்.அஷ்ரப், றவூப் ஹக்கீம் ,எம்.ஈ.எச்.மஹ்ரூப் போன்றோர்களின் காலப் பகுதியில் இதை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காத போது நான் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் அபிவிருத்தி குழு தலைவராகவும் இருந்த போது ஐந்து வருடங்கள் அந்த நேரத்தில்  மஹிந்த சமரசிங்க, சாகல ரத்நாயக்க அமைச்சர் அவர்களும் அதற்கு முன்னர் அர்ஜுன ரணதுங்கவும் இங்கு வருகை தந்த போது மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறிய போது அவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். 

அப்போதைய மாவட்ட செயலாளராக இருந்த புஷ்பகுமார இந்த காணிகள் அனைத்தையும் விடுவிப்பதாக கூறி ஐந்து வருடங்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களின் போதும் தீர்மானங்கள் எடுத்தோம். தற்போது வர்த்தமானி ஊடான அறிவிப்பு செய்யப்படவில்லை என தற்போதையவர்கள் கூறுகின்றனர். 

இன்று இதனை இது தொடர்பான அறிக்கைகளை ஒப்படைக்க முற்பட்ட போது அது பயனிக்கவில்லை இதனை விவசாயிகளிடம் ஒப்படைத்து செல்கிறேன். 

எங்கு வேண்டுமானாலும் இது தொடர்பில் குரல் கொடுக்க முன்வருவேன் இதனை அரசியலுக்காக பேசவில்லை அரசியலுக்கு என்று சோரம் போவதாக இருந்தால் என்னை விட்டு விடுங்கள். தொடர்ந்தும் உங்கள் காணிகளை பெற அரசாங்கத்திடம் தீர்வு பெற முயற்சியுங்கள் என்றும் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *