கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக சமீபத்தில் என்னைச் சந்தித்த திருகோணமலை மாவட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மாகாணக் கல்வி அமைச்சு ஆளணி பகிர்வு, வளப் பகிர்வு என்பவற்றில் திருகோணமலை மாவட்டத்தைப் புறக்கணிப்பதாக ஒரு குற்றச்சாட்டை தொழிற்சங்கத்தினர் முன்வைத்தனர். இது தொடர்பில் பல்வேறு விடயங்கள் அவர்கள் என்னுடன் கலந்துரையாடினர்.
உதாரணத்திற்கு, கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானப் பாட ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் நிரல் அமைச்சுக்கு காலத்துக்கு காலம் அறிவிக்கப்படுகின்றதெனவும், அதேவேளை திருகோணமலை மாவட்டப் பாடசாலைகளில் விஞ்ஞானப் பாட ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, மாகாணக் கல்வி அமைச்சு தவறான புள்ளிவிபரங்களை கையாள்வதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இல்லையென நிரல் அமைச்சுக்கு அறிவிப்பதால் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்றமை, இதனால் திருகோணமலை மாவட்டப் பாடசாலைகளின் விஞ்ஞானப் பாட ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படாமை என இரு வகை நட்டங்களை திருகோணமலை மாவட்டம் அனுபவித்து வருகின்றது எனக் கவலையும் வெளியிடப்பட்டது.
இது போன்ற இன்னோரன்ன காரணங்களினால் கடந்த க.பொ.த (சா.த) பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வு அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் 4 வலயங்கள் மிகவும் கீழ் நிலையில் உள்ளதாக ஆசிரியர் தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களுள் பெறுபேற்று அடிப்படையில் திருகோணமலை வலயம் 89 ஆம் இடத்திலும், கந்தளாய் வலயம் 92 ஆம் இடத்திலும், கிண்ணியா, திருகோணமலை வடக்கு ஆகிய வலயங்கள் 98, 99 ஆம் இடங்களிலும் உள்ளமை சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே, தயவு செய்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனம் செலுத்தி பரிசீலித்து அவற்றின் உண்மை குறித்து எனக்கும் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அக்கடித்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.