அக்கரப்பத்தனை – ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்த சிறுத்தையொன்று உயிருக்கு போராடிய நிலையில்,
நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தையை கண்ட பொதுமக்கள் அது பற்றி அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
அவர்கள் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கற்பாறை நீர் தேக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை, மூன்று மணிநேர போராட்டத்துக்கு மத்தியில் மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு,
சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தார்.
அதன்பின் சிறுத்தையை மேலதிக சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
சுமார் 6 வயதுடைய ஆண் சிறுத்தை என நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரிய சிகிச்சைகளின் பின்னர் சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.






