ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கினிகத்தேன பிளாக்வாட்டர் தமிழ் வித்தியாலய கட்டடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளதாகத் தெரிவித்து பெற்றோரால் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் கட்டிடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூரைகள் உடையும் தருவாயில் காணப்படுவதாகத் தெரிவித்தே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பாடசாலை 99 வருடங்களை பூர்த்தி செய்து அடுத்த வருடம் நூற்றாண்டு விழாவை கொண்டாடவுள்ள நிலையில் பாடசாலையின் கட்டிடத்தின் நிலை அபாயகரமாக காணப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் அருகில் உள்ள தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் இதற்கான நிரந்தர தீர்வு கிட்டும் வரை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதில்லை எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




