கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட, விவசாயிகள், தங்களுக்கான விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு, விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி விவசாயிகள் இன்று(25) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால், கிண்ணியா – கண்டி பிரதான போக்குவரத்து வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதனால் சுமார் 30 நிமிடங்களாக போக்குவரத்து தடைப்பட்டது.
விவசாய பூமி எங்களுடையது. எங்களுக்கு சொந்தமானதை இன்னொருவருக்கு தாரைவார்க்க முடியாது. விவசாயிகள் நாம் ஒன்றுபடுவோம். விலை நிலத்தை மீட்டெடுப்போம். காலம் காலமாக பயிர் செய்த நிலத்தை நாம் மீட்டெடுப்போம். இந்த நிலம் எமது நிலம். அது வியர்வை சிந்தி உழைத்த நிலம். நாங்கள் பிறந்த எமது நிலம். நாங்கள் இறக்கும் எமது நிலம். கம்பனி கேட்டால் காணி நிலம். நாங்கள் கேட்டால் இழுத்தடிப்பு!, கம்பனிகளுக்கு லாபம், எங்களுக்கு சாபம்! போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கிண்ணியா பொலிஸாரின் தலையீட்டினால் , போக்குவரத்து சீர் செய்யப்பட்டதோடு, விவசாயிகள் 12 பேருக்கு, பிரதேச செயலாளரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, விவசாயிகளும் பிரதேச செயலாளரும் கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




