ஆலங்குளம் காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்குமாறு கோரி துணுக்காய் பிரதேச சபையில் தீர்மானம்

முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தை இராணுவத்திடமிருந்து விடுவித்து குறித்த பகுதியை புனித பகுதியாக அறிவிக்குமாறு கோரி தீர்மானம் ஒன்று துணுக்காய் பிரதேச சபை அமர்வில் கொண்டுவரப்பட்டுள்ளது

துணுக்காய் பிரதேச சபையின் 3ஆவது அமர்வு தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன் தலைமையில் இன்று பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது

பிரதேச சபை உறுப்பினர்  சுயன்சனால் குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், 

குறித்த துயிலுமில்ல வளாகம் அமைந்துள்ள காணியில் மக்களின் காணிகளும் உள்ளடங்குவதாகவும் குறித்த மக்கள் இது தொடர்பில் 2017 ம் ஆண்டில் ஆளுநரிடம் சென்று தமக்கான மாற்று காணியை கோரியிருந்ததாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதேச ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களிலும் பேசப்பட்டதாகவும், தெரிவித்த சபை உறுப்பினர் செல்வநாயகம் ரஜீவன் குறித்த மக்களுக்கான மாற்று காணிகளை வழங்குமாறு தெரிவித்திருந்தார்

துயிலுமில்ல காணி தொடர்பில் ஒரு முரண்பாடான நிலை தோன்றியதை அவதானித்த தவிசாளர் குறித்த விடயத்தை வாக்கெடுப்புக்கு விடுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறுக்கிட்ட பிரதேச சபை உறுப்பினர் சிவகுமார் சிந்துஜன் குறித்த துயிலுமில்ல காணியில் பின்பக்கமாக உள்ள சில பகுதிகள் தான் மக்களினுடையது எனவும் முதலில் குறித்த தொடர்புடைய திணைக்களங்களுடன் கலந்தாலோசித்துவிட்டு மாற்று காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்

இது தொடர்பில் கருத்து உரைத்த தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன்,

துயிலுமில்லம் அமைந்துள்ள இடம் புனித பிரதேசமாக மாற்றப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இருக்கின்றது. போரிலே இறந்தவர்களை மதிக்கின்ற பண்பாடு எங்களுடையது. புனித பிரதேசமாக அறிவிக்கப்படல் என்ற ஏற்பாடு உரிய நடைமுறைகளுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

அதிலே பொதுமக்களின் காணிகள் இருக்குமாக உறுதிப்படுத்தப்பட்டால் அவை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஊடாக ஆராயப்பட்டு மாற்று காணிகள் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுடன் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார் 

குறித்த பிரேரணை சபை உறுப்பினர்களின் அனுமதியுடன் தீர்மானமாக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *