நேற்று மாலை முதல் பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி – வக்வெல்ல பிரதான வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதிப்பகுதி, காலி – பத்தேகம மாபலகம பிரதான வீதி, தலப்பிட்டி, சரேந்துகடே மற்றும் தனிபொல்கஹா சந்தி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது .
இதேவேளை, காலி நகரின் பல குறுக்கு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சில வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடிகால் அமைப்புகளை முறையாக சுத்தம் செய்யாததாலும், மழைநீர் வடிந்தோடும் பிரதான வடிகால்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் கட்டப்படுவதாலும் இதுபோன்ற சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.




