விஜய்யின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்னை பொலிஸார் மற்றும் 12 சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டிற்கு செல்லும் வீதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, யாரையும் உள்ளே அனுமதிக்காத வகையில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசல் விபத்துக்குப் பிறகு விஜய், திருச்சியிலிருந்து தனியார் விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு திரும்பினார். இதனையடுத்து, அடையார் துணைக் கமிஷனர் தலைமையில் கூடுதல் பொலிஸ்  பாதுகாப்பு நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அமைக்கப்பட்டது.

அவரது வீட்டின் அருகே தவெக தொண்டர்கள் திரண்டதால் மேலும் 12 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அதேசமயம், விஜய்யை கைது செய்ய கோரி தமிழ் மாணவர் மன்றம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன்போது பொலிஸார்  உடனடியாக போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில், விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று இரவு பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் தொலைபேசி வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர். ஆய்வின் முடிவில், அத்  தகவல் புரளி எனத் தெரியவந்தது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக இடம்பெற்றதால், விஜய் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *