புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி செம்பட்டை பிரதேசத்தில் இன்று (29) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜனட் ஒருவர் உயிழந்துள்ளார்.
புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி கோழிகளை ஏற்றி சென்ற லொறியும், மதுரங்குளியில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த சொகுசு கார் ஒன்றும் மதுரங்குளி செம்பட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த புத்தளம் இஹலபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் ருவான் சமிந்த சம்பத் அபேசிங்க உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




