திருகோணமலை – மூதூர் சதாம் வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபரின் இடமாற்றத்தை இடைநிறுத்தி , பழைய அதிபரையே மீண்டும் நியமிக்குமாறு வழியுறுத்தி பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னாள் இன்று (29) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.
இதன் பின்னர் குறித்த இடத்திற்கு மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடினார்.
அதிபர் தரத்திலுள்ள ஒருவரே புதிதாக ந நியமிக்கப்பட்டுள்ளார். அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென தெரிவித்த போதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பழைய அதிபரே எமக்கு வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதன்போது சிறிய வாக்குவாதம் இடம்பெற்றது.
இதன்பின்னர் , உங்களது கோரிக்கையை எழுத்து மூலமாக அறியத்தருமாறும் இது சம்மந்தமாக மாகாண கல்விப் பணிப்பாளருக்கு மேலதிக நடவடிக்கைக்காக அக் கடிதத்தை அனுப்புவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.
அதற்கிணங்க பழைய அதிபரை நியமிக்குமாறு கடிதம் வழங்கி விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

