அரசாங்கம் மக்களால் வீழ்த்தப்படும்; கோட்டா முன்பு மஹிந்த முழக்கம்

முற்போக்கான முறையில் அரசாங்கம் செயற்படும் போது ஜனநாயக ரீதியில் அந்த அரசாங்கம் மக்களால் வீழ்த்தப்படும். ஜனநாயக ரீதியில் ஆட்சியதிகாரத்தை முன்னெடுத்ததையிட்டு பெருமை கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியிலான ஆட்சியால் தனிப்பட்ட பலன்களை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த முடியவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற வாக்காளர் தின தேசிய நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

18 வயது பூர்த்தியாகியுள்ள இளைஞர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தியுள்ளோம். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெரும்பாலான இளைஞர் – யுவதிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் பிரதான அம்சமாகும். 1975 மற்றும் 1982ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தேர்தல்கள் பிற்போடப்பட்டதால் இளைஞர்கள் தேர்தல்கள் மீது அதிருப்தியடைந்தனர்.

தேர்தல்கள் பிற்போடப்பட்டதால் 1988 மற்றும் 1989ஆம் காலப்பகுதிகளில் இனக்கலவரம் ஏற்பட்டு பாரிய விளைவினை ஏற்படுத்தியது. 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தினேன்.

அரசாங்கம் முற்போக்கான முறையில் செயற்படும் போது ஜனநாயக ரீதியில் அந்த அரசாங்கம் மக்களால் வீழ்த்தப்படும்.

ஜனநாயக ரீதியில் ஆட்சியதிகாரத்தை முன்னெடுத்ததையிட்டு பெருமை கொள்கின்றேன். ஜனநாயக முறையில் ஆட்சியதிகாரத்தை முன்னெடுத்ததால் தனிப்பட்ட பலன்களைப் பெற்றுக்கொள்ளவில்லை.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்ட வகையில் தேர்தல் முறையில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தியது.

அரசியலமைப்பின் 19ஆம் திருத்தம் அரச நிர்வாகத்தில் பல நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியது.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது.

கொரோனாத் தாக்கம் காரணமாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply