2025 ஆசியக் கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி மறுத்துள்ளார்.
அதற்கு பதிலாக, ஆசிய கிரிக்கெட் பேரவையை (ACC) மேற்பார்வையிடும் PCB தலைவர், இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவை ACC அலுவலகத்துக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் மொஹ்சின் நக்வி தலைமையிலான ACC, ஆசியக் கிண்ணம் மற்றும் பதக்கங்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேறியதால் குழப்பம் ஏற்பட்டது.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, பரிசளிப்பு மேடைக்கு அழைக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தது.
பாகிஸ்தானுடனான இந்தியாவின் சிக்கலான புவிசார் அரசியல் உறவுகளுக்கு மத்தியில் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கிண்ணத்தை பெற மாட்டோம் என்று கூறிய இந்திய அணி, கிண்ணத்தை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரால் வழங்குமாறு கோரியிருந்தது.
இருப்பினும், நக்வி அந்தக் கோரிக்கையை மறுத்து இந்திய அணி, கிண்ணத்தை தன்னிடமிருந்து பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இந்திய அணி மேடையில் ஏற காத்திருந்தபோது, ACC அதிகாரிகளில் ஒருவர் கிண்ணத்தை மைதானத்திலிருந்து எடுத்துச் சென்றார்.
அதே இரவு தாமதமாக, இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் தேவஜித் சைகியா நக்வியின் செயல்களுக்காக அவரைக் கடுமையாகக் கண்டித்தார்.

இந்த நிலையில், ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதாவது செவ்வாயன்று, 2025 ஆசியக் கிண்ணத்தை ஒப்படைக்குமாறு BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விடுத்த கோரிக்கையை மொஹ்சின் நக்வி நிராகரித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.
துபாயில் நக்வி தலைமையில் நடைபெற்ற வழக்கமான ACC கூட்டத்தில் இந்த விடயம் வெளிவந்தது.
அங்கு கிண்ணத்தை ஒப்படைக்க சுக்லா பலமுறை அழுத்தம் கொடுத்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று நக்வி பதிலளித்தார்.
மேலும் வலியுறுத்தலுக்குப் பின்னர், இந்திய அணி கிண்ணத்தைப் பெற விரும்பினால், அதன் தலைவர் ACC அலுவலகத்திற்கு நேரில் சென்று அதைப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கிண்ணத்தை இந்திய தரப்பிடம் ஒப்படைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் ஊடகமான ஜியோ சூப்பர் தெரிவித்துள்ளது.
பிராந்திய கிரிக்கெட் அமைப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, கூட்டத்தில் கலந்து கொண்ட பிசிசிஐ அதிகாரிகள் – நக்வியின் நிலைப்பாட்டிற்கு கடுமையாக பதிலளித்தனர்.
மாறாக கிண்ணத்தை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்துக்கு (ஐசிசி) தலைமையகத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரினர்.




