அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டமொன்று நேற்றையதினம் இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கியின் வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று இரவு இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவும் தீப்பந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச வங்கிகள் அனைத்திலும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் காணப்பட்டு வரும் நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முகமாக மாவட்ட மட்டத்தில் நேற்று இரவு இப்போராட்டம் இடம்பெற்றது.
திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் மாத்தளை மாவட்டம் உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று மாலை இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் தீப்பந்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













