தேசிய பூங்காவைப் பார்வையிடச் சென்று வௌ்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

வில்பத்து தேசிய பூங்காவைப் பார்வையிடச் சென்றபோது பெய்த பலத்த மழை காரணமாக நுழைவாயிலுக்குத் திரும்ப முடியாமல் தவித்த 30க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

அவர்கள் பயணித்த வீதிகள் சேதமடைந்ததால், அந்தக் குழுவால் எலுவன்குளம் நுழைவாயிலுக்குத் திரும்ப முடியவில்லை. 

எனவே வனவிலங்கு அதிகாரிகள் பிரவேசித்து சஃபாரி வாகனங்களைப் பயன்படுத்தி அவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர். 

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், கலா ஓயாவிலிருந்து பாயும் பாரியளவான நீர் காரணமாக, எலுவன்குளம் நுழைவாயிலைச் சுற்றியுள்ள பகுதி 6 அடிக்கும் அதிகமான நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் விளைவாக, போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் இந்தக் குழு திரும்ப முடியாத நிலையில் இருந்துள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சிவனடி பாத மலை உச்சியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக பெருமளவில் நீர் பாய்ந்து வருகின்றது. 

இதனால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகள் மழை பெய்யும் நேரங்களில் மலைக்கு செல்ல வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலையமும் மஸ்கெலியா பிரதேச சபையும் அறிவுறுத்தி வருகின்றன.

மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகள் வெள்ளப் பெருக்கு காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளதால், 

நீராடச் செல்லாமல் இருக்குமாறு பொதுமக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு மஸ்கெலியா 

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply