பொன் அணிகளின் போர்: சென். பற்றிக்ஸ் வெற்றி

யாழ்ப்பாணம், மார்ச் 13

105ஆவது பொன் அணிகளின் போரில் யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி அணி 10 விக்கெட்களால் மாபெரும் வெற்றி பெற்றது.

பொன் அணிகளின் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகள் மோதிய பெருந்துடுப்பாட்டப் போட்டி வெள்ளிக்கிழமை சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

முதல் இனிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி 98 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 133 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவடைந்திருந்தது.

இரண்டாம் நாளான நேற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் கீர்த்தன் 59, சௌத்ஜன் 27, டெஸ்வின் 24 ஓட்டங்களைப் பெற்றனர்.

யாழ்ப்பாணக் கல்லூரியின் பந்துவீச்சில் பிருந்தன் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

58 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரிக்கு துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் சொதப்பவே 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 84 ஓட்டங்களையே பெற்றது.

இதில், பிரதீப் 24, விஷ்ணுகாந்த் 17, சங்கீத் 17, ஓட்டங்களை அதிகமாகப் பெற்றனர்

சென். பற்றிக்ஸின் பந்துவீச்சில் அபிசன் 11 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

28 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகு இலக்குடன் இரண்டாவது இனிங்ஸில் களமிறங்கிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.

இதில், சௌத்ஜன் 19 ஓட்டங்களையும், சியாந்த்சன் 7 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சென். பற்றிக்ஸ் கல்லூரியின் எஸ். கீர்த்தன் தெரிவாக, அடுத்த சிறந்த வீரராக யாழ்ப்பாணக் கல்லூரியின் கீர்த்தன் தெரிவானார்.

சிறந்த பந்துவீச்சாளராக சென். பற்றிக்ஸ் கல்லூரியின் ஏ. எவ். டெஸ்வின் தெரிவாக, அடுத்த சிறந்த வீரராகவும் சென். பற்றிக்ஸின் வீரர் எஸ். அபிசன் தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த சகலதுறை வீரராக யாழ்ப்பாணக் கல்லூரியின் பி. பிருந்தன், சிறந்த களத்தடுப்பாளராக சென். பற்றிக்ஸ் கல்லூரியின் ஜே. ஜெஸ்ரிகன், அடுத்த சிறந்த களத்தடுப்பு வீரராக யாழ்ப்பாணக் கல்லூரியின் ஜே. ரைஸ் ஜென்சன், சிறந்த இணைப்பாட்ட வீரர்களாக சென். பற்றிக்ஸ் கல்லூரியின் எஸ். கீர்த்தன் – எம். சௌத்யன், போட்டியின் நாயகனாக சென். பற்றிக்ஸ் கல்லூரியின் ஏ. எவ். டெஸ்வின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

சிறந்த வீரர்களுக்கான விருது சென். பற்றிகஸின் எம். சௌத்ஜன், யாழ்ப்பாணக் கல்லூரியின் பி. பிரதீப் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply