
யாழ்ப்பாணம், மார்ச் 13
கொழும்பு, மார்ச் 13: வடகடல் நிர்வாகத்தில் நிலவும் சீர் கேடுகள் சரி செய்யப்பட்டு, அந்த நிறுவனம் இரு வாரங்களில் இயங்கச் செய்யப்படும் என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது: வடகடல் நிறுவனத்தை, 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆரம்பித்து வைத்தேன். வடகடல் நிறுவனம் அரசாங்கத்துக்கு சொந்தமானது. அரசுகள் மாறும்போது, பிரச்சினைகள் வரும்.
அண்மையில், அந்த நிறுவனம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. நான் ஆரம்பித்து வைத்துள்ள காரணத்தால் நிறுவனம் மூடாமல் இருப்பதற்கு எனது பணத்தில் ரூ. 20 மில்லியன் தருகிறேன். நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள், இதற்கு தேவையான மூலப்பொருட்களை தொடர்ந்து தருகின்றேன். நீங்கள் அதனை உற்பத்தி செய்து விற்பனை செய்யுங்கள். ஆனால் மூன்று மாதத்திற்கு இந்த நிதியில் இருந்து எந்த பணமும் எடுத்துக் கொள்ளக்கூடாது. சம்பளத்திற்கு வேறு வழியை தேடுக் கொள்ளுங்கள் என நிர்வாகத்திடம் கூறியிருந்தேன். இதற்கு நிர்வாகம் உடன்பட்டது.
ஆனால், வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகளைப் பெருக்கி லாபம் பார்த்து அதில் இருந்து சம்பளம் உள்ளிட்டவற்றைக் கொடுப்பதற்குப் பதிலாக, நான் கொடுத்த 20 மில்லியன் மூலப் பணத்தை நிர்வாகம் பயன்படுத்தத் தொடங்கியது. இதனால் அந்தப் பணத்தை முடக்கியுள்ளேன். இது வடகடல் நிர்வாகத்தின் தவறு. இந்த நிறுவனம் சரியாக இயங்கவில்லை. இரு வாரங்களில் நிர்வாகத்தில் திருத்தங்களை கொண்டு வந்த பின்னர் பிரச்சினைகளை தீர்க்கப்படும். வடகடல் நிறுவனம் மீண்டும் வழக்கம்போல தொழிற்படத் தொடங்கும் என்றார் அவர்.




