
கொழும்பு, மார்ச் 13
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திட்டமிட்டவாறு நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் சம்பந்தன் கூறியதாவது,
ரெலோவின் நிலைப்பாடு தொடர்பில் நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தபோதும், அவை நடைபெற்றிருக்கவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தால் இந்தச் சந்திப்பு குறித்த அறிவித்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைமைக்கு வழங்கப்பட்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இப்போது விடுத்துள்ள அழைப்பை ஏற்பது சர்வதேசப் பொறியிலிருந்து அவரை மீட்கும் நடவடிக்கையாகி விடும் எனத் தெரிவித்த ரெலோ, அதன் காரணமாக அந்தச் சந்திப்பில்தான் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தனது முடிவைக் கூட்டமைப்பின் தலைமைக்கு எழுத்திலும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., மார்ச் 10 ஆம் திகதியிட்டு அனுப்பிவைத்தார் எனக் கூறப்படும் கடிதம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
கூட்டமைப்பின் சார்பில் நானும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வோம். வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், புதிய அரசமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இந்தச் சந்திப்பின்போது பேசவுள்ளோம் – என்றார்.




